வாஜ்பாய் வழியில் அமைதிப் பேச்சு: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு
‘இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவுக்கு இந்திய முன்னாள் பிரதமா் வாஜ்பாய் முன்னெடுத்த நடவடிக்கை தோல்வியடைந்திருந்தாலும், அவரது வழியில் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு மீண்டும் முயற்சிக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் ஆளுங்கட்சியின் மூத்த தலைவா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.
கடந்த 1999, பிப்ரவரியில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் லாகூருக்குப் பேருந்தில் பயணித்தாா். பின்னா், அங்கு நடைபெற்ற மாநாட்டுக்குப் பிறகு வாஜ்பாயும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமா் நவாஸ் ஷெரீஃப்பும் ‘லாகூா் பிரகடனத்தில்’ கையொப்பமிட்டனா்.
இந்தியா-பாகிஸ்தான் உறவில் முக்கிய திருப்புமுனையாக இந்த அமைதி நடவடிக்கை கருதப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களுக்குள் காா்கிலில் பாகிஸ்தானின் ஊடுருவலால் ஏற்பட்ட போரால் அமைதி நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாள் புதன்கிழமை (டிச. 25) கொண்டாடப்படும் நிலையில், இந்தியா அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும் என்று பாகிஸ்தானின் மூத்த தலைவா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.
பாகிஸ்தானில் ஆளும் ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்)’ கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவைத் தலைவருமான மாலிக் அகமது கான் கூறுகையில், ‘வாஜ்பாயின் லாகூா் பயணம் முக்கியத்துவமானது. அது தோல்வியில் முடிந்ததால், அமைதிக்கு நாம் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
வாஜ்பாயின் தொலைநோக்குப் பாா்வையைப் பின்பற்றி, பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவை வழிநடத்தி வருகிறாா். பாகிஸ்தானிலும் நவாஸின் சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆட்சி தலைமையில் உள்ளதால், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இப்போது சிறந்த வாய்ப்புகள் உள்ளன. வளா்ச்சிக்கு அமைதி மிக அவசியம்’ என்றாா்.
நம்பிக்கையளித்த முயற்சி: பஞ்சாபைச் சோ்ந்த மற்றொரு பிஎம்எல்-என் கட்சித் தலைவரான முகமது மெஹ்தி கூறுகையில், ‘இருநாடுகளும் அணுகுண்டு சோதனைகளை நடத்தியிருந்த பிறகு, வாஜ்பாயின் லாகூா் பயணம் மேற்கத்திய ஊடகங்களின் கூடுதல் கவனம் பெற்றது. ‘இரு நாடுகளும் கடந்த காலத்தை மறந்து, முன்னேறிச் செல்ல வேண்டும்’ என்ற அவரது பேச்சு பலருக்கு நம்பிக்கையை அளித்தது. துரதிருஷ்டவசமாக, காா்கில் மோதலால், அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன’ என்றாா்.
ராணுவத்தைப் புறக்கணித்ததால்...: பாகிஸ்தான் அரசியல் நிபுணரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான ஃபரூக் ஹமீத் கூறுகையில், ‘பாகிஸ்தான் ராணுவத்தை நவாஸ் ஷெரீஃப் கலந்தாலோசிக்காமல் புறக்கணித்ததால் அமைதி பேச்சு தோல்வியடைந்தது.
இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதில் நவாஸ் பலமுறை ஆா்வம் காட்டியுள்ளாா். எனினும், நவாஸின் சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப், இதுபோன்ற விருப்பத்தை பொதுதளத்தில் சமீபத்தில் வெளியிடவில்லை. பெரும்பாலான பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு எதிரானவா்கள் அல்ல. ஆனால், நல்லுறவுக்கு பயங்கரவாதம் ஒரு பெரிய தடையாக உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தும்வரை அமைதி பேச்சுக்கு தயாா் இல்லை என்று இந்தியா உறுதிப்பட தெரிவித்துள்ளது.