மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடியில் சிறப்பு மாணவர், மாணவியர் விடுதி: முதல்வர் ...
வானிலை தரவுகளை மீறி புயல் பாதிப்பு: அமைச்சர் சேகர்பாபு
வானிலை தரவுகளை மீறி பென்ஜால் புயலின் பாதிப்பு இருந்ததாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் அப்போது தெரிவித்ததாவது:
வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களின் புயல் தொடர்பான கருத்துகளை உள்வாங்கி முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக, கடந்த காலங்களில் சென்னையில் மழை பெய்தாலே 3 நாள்கள் வரை ஸ்தம்பித்த நிலையில், சென்னையில் 130 மி.மீ. மழை பெய்த 12 மணி நேரத்திற்குள்ளாகச் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது.
பென்ஜால் புயல் ஒரிரு நாள்கள் ஒரே இடத்தில் மையம் கொண்டு நின்றதை வானிலை நிபுணர்கள் கூறும்போது, 50 ஆண்டு காலப் புயல் வரலாற்றில் இதுவே முதல்முறை என்கின்றனர்.
உடனடியாக கடலூர் மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எ.வ.வேலு, விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி, சிவசங்கர், செந்தில்பாலாஜியும் நிவாரணப் பணிகளுக்கான பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்; கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரிக்கு முத்துசாமி, ராஜேந்திரன் பொறுப்பு அமைச்சர்களாகச் செயலாற்றி வருகிறார்கள்.
இன்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் ரூ. 2000 கோடி நிவாரணம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு, உதவி செய்வதாக அறிவித்ததுடன் அப்படியே நின்றுகொண்டிருக்கும் வேளையில், மாநில அரசு பாதிக்கப்பட்ட கால்நடைகள், வீடுகள், பயிர்கள் போன்றவற்றிற்கு நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையைப் பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி, 25 ஆம் தேதியிலிருந்து தண்ணீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டு உள்ளது. முன்னறிவிப்பு கொடுத்து முதற்கட்டமாக 25ஆம் தேதி 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதே போல் 5 முறை எச்சரிக்கப்பட்டு பின்னரே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இறுதியாக 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீரை முன்னறிவிப்பு செய்துதான் வெளியேற்றினோம். அதனால்தான் எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்திருந்தால் உயிர்சேதம் இன்றி எடுத்த நடவடிக்கைக்காகத் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால், வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசிடமிருந்து நிதியைக் கேட்டு பெற அழுத்தம் தரவேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்.
இதையும் படிக்க: புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் வரவழைத்து நிவாரணம் வழங்கிய விஜய்!!
தமிழக அரசைப் பொறுத்தவரை இந்திய வானிலை ஆய்வு மையம், தனியார் ஆய்வாளர்களின் தரவுகளை உள்வாங்கி, துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் உடனுக்குடன் அனுப்பிள்ளோம். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் வாயிலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து எடுத்துவந்துள்ளோம்.
பென்ஜால் புயலின் தாக்கத்தை இந்திய வானிலை ஆய்வு மையமே கணிக்க திணறியது. அப்போதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களை ஒருங்கிணைத்து முதல்வர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
வானிலை தரவுகளை மீறி புயலின் பாதிப்பு இருந்தது. அரசு தயார் நிலையில் இருந்த காரணத்தால்தான் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்று பேசினார்.