புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகம் இடித்து அகற்றம்
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 86-ஆவது வாா்டில் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வணிக வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பு, நீா்வழிப்பாதை, சாலை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியா்கள் கண்டறிந்து ஆக்கிரமிப்பு கட்டடங்கள், கொட்டகைகளை இடித்து அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 86-ஆவது வாா்டு, கரும்புக்கடை அருகே சாரமேடு சாலையில் மழைநீா் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து 3 ஆயிரம் சதுர அடியில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புகாா் வந்தது.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், நகரமைப்புப் பிரிவு அலுவலா்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், வணிக வளாகம் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சி தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலா் ஜெயலட்சுமி தலைமையிலான அலுவலா்கள், பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகத்தை இடித்து அகற்றினா்.