வால்பாறை அக்காமலை புல்மேடு பகுதியில் வனத் துறையினா் ரோந்து
காட்டுத் தீ ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறை அக்காமலை புல்மேடு பகுதியில் வனத் துறையில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனா்.
தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வால்பாறை எஸ்டேட்டுகளில் வெயிலின் தாக்கத்தால் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், வனப் பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்துகிடக்கின்றன.
இந்நிலையில், காட்டுத் தீ ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள ரொட்டிக் கடை பாறைமேடு, அய்யா்பாடி எஸ்டேட், அக்காமலை புல்மேடு ஆகிய பகுதிகளை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
மேலும், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு மா்ம நபா்கள் வனத்துக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், அக்காமலை புல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ரோந்து மேற்கொண்டு வருவதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.