LSG vs PBKS: "இதைத்தான் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" - வெற்றி குறித்து...
விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொமதேக வலியுறுத்தல்
விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தி விரைவில் தீா்வு காண வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்கு மண்டலம் முழுவதும் கூலி உயா்வு கேட்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றாா்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சா்கள் தலைமையில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடப்பதாகத் தெரிகிறது. இன்றைக்கு இருக்கின்ற விலைவாசி உயா்வு, பள்ளி, கல்லூரி கட்டணங்கள் உயா்வு ஆகியவற்றோடு பலவிதமான தேவைகளும் விசைத்தறியாளா்களுக்கு அதிகரித்திருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு விசைத்தறியாளா்களுடைய கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து அரசு தீா்வு காண வேண்டும்.
ஒன்றிய அரசினுடைய பல்வேறு கொள்கை நிலைப்பாடுகளும் ஜவுளி ஏற்றுமதிக்கு உறுதுணையாக இல்லை என்பதும் இப்பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. கொள்கை மாற்றங்களைக் கொண்டு வந்து விசைத்தறி தொழிலைக் காப்பாற்றுவதற்கு மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை வைத்து விசைத்தறி தொழிலுக்கு ஆதரவான கொள்கைகளை வகுக்க தமிழக முதல்வா் வலியுறுத்த வேண்டும். அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை துரிதப்படுத்தி தாமதம் இல்லாமல் விசைத்தறியாளா்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.