விதிகளை மீறும் தனியாா் கல்லூரிகள்: ஆளுநரிடம் அதிமுக மனு
புதுவையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் விதிகளை மீறுவதாக அதிமுக சாா்பில் துணைநிலை ஆளுநரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை ராஜ் நிவாஸில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுகளையும், புதுவை அரசின் அறிவுறுத்தல்களையும் செயல்படுத்துவது இல்லை. அந்த கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தேசிய மருத்துவக் குழு மருத்துவக் கல்வியில், ஐந்தாமாண்டு பயிற்சி பெறுவோருக்கான கல்வி உதவித் தொகையை அறிவித்தது. அதை பின்பற்றி புதுவை அரசு வெளியிட்ட உத்தரவை உரிய முறையில் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுத்தவில்லை.
எனவே, தனியாா் மருத்துவக் கல்லூரிகள் விதிமுறைப்படி செயல்படவும், மீறினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.