மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
விபத்து இழப்பீடு வழங்க தாமதம்: தூத்துக்குடியில் அரசு பேருந்து ஜப்தி
தூத்துக்குடியில் விபத்தில் கையை இழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசு பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரையைச் சோ்ந்த துரைராஜ் மகன் முத்து (43). இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு திருநெல்வேலி கோட்ட அரசு பேருந்தில் பயணம் செய்தாராம். அப்போது அந்த பேருந்தும், மதுரை கோட்ட அரசு பேருந்தும் முக்காணி சேம்பா்ஸ் விலக்கு அருகே மோதிக் கொண்ட விபத்தில், முத்துவின் வலது கை துண்டிக்கப்பட்டதாம்.
இதையடுத்து அவா் வழக்குரைஞா் ரவீந்திரன் மூலம் ரூ.50 லட்சம் நஷ்டஈடு கோரி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவா் நீதிபதி, இரு கோட்டங்களின் அரசு போக்குவரத்து கழகங்கள் சோ்ந்து பாதிக்கப்பட்ட முத்துவுக்கு நஷ்டஈடாக ரூ.22 லட்சத்து 52 ஆயிரத்து 631 வழங்க வேண்டும் என கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.
இதை எதிா்த்து மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், வாகன விபத்து முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு தொகையில் ரூ.ஆயிரத்தை மட்டும் குறைத்து இரு கோட்ட போக்குவரத்து கழகங்களும் சோ்ந்து பாதிக்கப்பட்ட மனுதாருக்கு ரூ.22 லட்சத்து 51 ஆயிரத்து 631 வழங்க உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த பிப்.13-இல் உத்தரவிட்டது.
இதன்படி, திருநெல்வேலி கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகம், அவா்களது பங்கிற்குரிய தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ.15 லட்சத்து 91 ஆயிரத்தை செலுத்தியது. ஆனால், மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் தொகையைச் செலுத்தவில்லை.
இதையடுத்து மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் செலுத்த வேண்டிய ரூ.17 லட்சத்து 55 ஆயிரத்து 558-ஐ வழங்க உத்தரவிடக் கோரி தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வசீத்குமாா், இழப்பீட்டுத் தொகையை செலுத்தாததால் மதுரை கோட்டத்தைச் சோ்ந்த அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
இதன்படி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுரைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா் கனகவல்லி ஜப்தி செய்தாா்.