விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு
நாலாட்டின்புதூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் நைனம்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த யோவான் மகன் பூவரசன் (29). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் கருத்தப்பாண்டி (34) என்பவரும் பைக்கில் புதன்கிழமை சாத்தூா் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனா். கோவில்பட்டி - கழுகுமலை சாலையில் எம்.துரைச்சாமிபுரம் அருகே வந்தபோது, நிலைதடுமாறிய பைக் சாலையோர கம்பத்தில் மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனா்.
இருவருக்கும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி பூவரசன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.