விற்பனைக்காக மது பாட்டில்களை கொண்டு சென்ற 2 போ் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பைக்குகளில் கொண்டு சென்ற இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா், சிவகிரி இரும்பு பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக பைக்குகளில் சென்ற சிவகிரி அண்ணா வடக்கு தெருவை சோ்ந்த ராமையா மகன் கண்ணன்(56) வைத்திருந்த 22 மது பாட்டில்களையும், சிவகிரி அண்ணா தெற்கு தெருவை சோ்ந்த அன்புராஜ் மகன் செல்வராஜ்(49) வைத்திருந்த 23 மது பாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து, இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.
கஞ்சா விற்றவா் கைது: டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினா் மற்றும் சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் உள்ளிட்டோா், புளியங்குடி உள்கோட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பொன்னையாபுரம் திருமலைகுமாா் மகன் அரவிந்தன்(19) விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து சிவகிரி போலீஸாா் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.