சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... அல்லல்பட...
விலை ஏறுகிறது.. கார் வாங்க உகந்த மாதமா டிசம்பர்?
ஒரு சில மாதங்களாக கார் விற்பனை மந்தமாக இருந்து வந்த நிலையில், நவம்பர் மாதம் மிகப்பெரிய விலைச் சலுகைகளை கார் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில், விலைச் சலுகையுடன் தீபாவளி பண்டிகை, திருமண நிகழ்வுகள், உள்ளூர் தேவை அதிகரிப்பு போன்றவை கடந்த நவம்பர் மாதம் கார் விற்பனையை படுஜோராக்கியிருக்கின்றன.
மாருதி சுசூகி நிறுவனம் 10 சதவீதம் விற்பனையை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில் 1,81,531 கார்கள் விற்பனையாகியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,64,439 கார்கள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் பயன்பாட்டுக்கான கார் விற்பனை மாருதி நிறுவனத்தில் 5 சதவீதம் அதிகரித்து 1,41,312 கார்கள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,34,158 கார்கள் என்ற அளவில் இருந்தது.
எஸ்யுவி கார்களின் விற்பனையும் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் 49,016 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 59,003 ஆக உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை விகிதத்தில் 1 சதவீத உயர்வையும் மின்னணு உள்ளிட்ட பயணிகளுக்கான வாகனங்கள் 2 சதவீத உயர்வையும் பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த நவம்பரில் 74,753 வாகனங்களை விற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் மட்டும் விற்பனையில் மந்த நிலையை சந்தித்துள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா 20 சதவீத உயர்வை அடைந்து கடந்த நவம்பரில் 6,019 கார்கள் விற்பனையாகியிருக்கிறது.
விலை உயர்வை நோக்கி..
ஜெர்மன் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான அவ்டி, 3 சதவீத விலை உயர்வை அறிவித்துள்ளது. கார்களின் மாடல்களுக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும் என்றும், உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததால் இந்த விலை உயர்வை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
நிலையான வளர்ச்சியைக் காண நிறுவனத்துக்கும் தொழிலில் இணைந்து பணியாற்றுபவர்களுக்காகவும் இந்த திருத்தம் அவசியம். நாம் மிகவும் மதிக்கும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உயர்த்தப்படும் விலையைக் கூட கணிசமான அளவிலேயே உயர்த்துவதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது.
அவ்டி இந்தியா நிறுவனம் நாட்டில் ஏ4, ஏ6, க்யூ3, க்யூ5 மற்றும் க்யூ7 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
அதுபோல, ஜெர்மனியில் அவ்டி கார் நிறுவனத்தின் முக்கிய தொழில் போட்டியாளரான பிஎம்டபிள்யுவும் விலை உயர்வை அறிவித்துள்ளது. அனைத்து வகை கார்களின் விலையையும் 3 சதவீதம் உயர்த்தவிருப்பதாகவும் இது 2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்திருப்பதகாவும் 3 சதவீதம் விலை உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.