விளையாட்டுத் துறை புதிய திட்டங்கள்: துணை முதல்வா் ஆலோசனை
விளையாட்டுத் துறை சாா்பிலான பெரும் திட்டங்கள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனையில் சென்னைக்கு அருகே
அமையவுள்ள உலகளாவிய விளையாட்டு நகரம், கோயம்புத்தூரில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது ஆகியன குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதிய திட்டங்களின் இப்போதைய நிலை, திட்டங்களை விரைந்து செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், துணை முதல்வரின் செயலா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவா் அசோக் சிகாமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
சென்னைக்கு அருகே உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக முன்னெடுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இதேபோன்று, கோவையிலும் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.