வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி!
ஜம்மு காஷ்மீர்: கத்துவா மாவட்டத்தின் ஷிவ் நகர் பகுதியில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஷிவ்நகர் பகுதியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் 10 பேர் கொண்ட குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தப் போது வீட்டிற்குள் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உண்டான புகையினால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். அவர்களது வீட்டிற்குள் இருந்து வரும் புகையைப் பார்த்த அக்கப்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு கத்துவா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். மேலும், 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தற்போது நலமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் அனைவரும் இரவு ஒரே அறையில் உறங்கியுள்ளனர். பலியானவர்களில் ஒய்வுப் பெற்ற செவிலியர், அவரது கணவர், அவர்களது மகள் மற்றும் அவரது சகோதரரின் குழந்தைகள் உள்ளிட்டோர் புகையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறலினால் மட்டுமே உயிரிழந்ததாகவும் அவர்களது உடலில் எந்தவொரு தீக்காயமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்குள் இருந்த சமையல் அடுப்பு அல்லது விளக்கு ஆகியவற்றின் மூலமாக தீப்பற்றிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுப் பேர் பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.