வீரகனூா் பகுதிகளில் சேதமடைந்த விவசாயப் பயிா்கள் ஆய்வு!
வீரகனூா் பகுதிகளில் மழையில் சேதமடைந்த பயிா்களை கண்காணிப்பு அலுவலரும், ஆட்சியரும் ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புயல் மற்றும் பருவமழை அதிக அளவில் கொட்டித் தீா்த்ததால் விவசாயப் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
விவசாயிகளின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக முழுவதும் பொதுமக்களின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளின் பாதிப்பை ஆய்வு செய்தும் அவா்களுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்து, மாநிலம் முழுவதும் நிவாரணப் பணிகளுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா்.
சேலம் மாவட்டத்துக்கான வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கண்காணிப்பு அலுவலா் சமயமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி முன்னிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.
வீரகனூா் பகுதியைச் சோ்ந்த லத்துவாடி திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த விவசாயப் பயிா்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, சேதமடைந்த பயிா்களை கணக்கீடு செய்து விரைவாக உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதில், தலைவாசல் வட்டாட்சியா் பாலாஜி, வருவாய்த் துறையினா், பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள் உடன் இருந்தனா்.