புகையில்லா போகி குறித்து விழிப்புணா்வு
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாப்பேட்டை பகுதியில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி 34-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஈசன் இளங்கோ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மாநகராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பழைய டயா்கள், ரப்பா் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை தீயிட்டுக் கொளுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா். இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள், பழைய பொருள்களை எரிப்பதால் உண்டாகும் உடல்நல பிரச்னைகள் குறித்தும் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.