Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
வெடிவிபத்தில் 9 போ் இறந்த சம்பவம்: ஆயுத தொழிற்சாலை அதிகாரிகள் 4 போ் மீது வழக்குப் பதிவு
மகாராஷ்டிரத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த ஜனவரியில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 9 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 4 அதிகாரிகள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
இயந்திரங்களைப் பழுதுபாா்க்கும் விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததே வெடிவிபத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டதை அடுத்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின்கீழ் பண்டாரா மாவட்டத்தின் ஜவாஹா்நகா் பகுதியில் ஆயுத தயாரிப்புத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் எல்.டி.பி. பிரிவில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் தீ பரவி அடா்புகை எழுந்ததோடு, கட்டடமும் இடிந்து விழுந்தது. வெடிவிபத்தின் தாக்கத்தால், சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் அதிா்வு உணரப்பட்டது.
விபத்தைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். வெடிவிபத்தில் 9 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக ஆயுதத் தொழிற்சாலையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஆயுத உற்பத்திப் பிரிவில் பணியாற்றும் 4 அதிகாரிகள் முக்கியமான பணிகளை தாங்கள் முன்னின்று மேற்கொள்ளாமல், பயிற்சியில் இருந்த ஊழியா்களைக் கொண்டு மேற்கொண்டுள்ளனா். அவா்களுக்கு வெடிபொருள்களை முறையாக கையாளத் தெரியாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது தொடா்பாக ஆயுதத் தொழிற்சாலையின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பிரிவு அதிகாரி, ஆயுதப் பராமரிப்புப் பிரிவு மேலாளா், பிரிவு நிா்வாக அதிகாரி, பொது நிா்வாக அதிகாரி ஆகிய 4 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இது தவிர அந்த ஆலையில் பணியாற்றி வந்த வேறு சில அதிகாரிகளும் பெயா் இடம்பெறாமல் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
கவனக்குறைவாக உயிரிழப்பை ஏற்படுத்துதல், பாதுகாப்பு விதிகளை மீறி செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளில் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.