வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்த லாரிகள் சிறைபிடிப்பு
திருவாரூா் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனா்.
திருவாரூா் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெறுகின்றன. அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், காஞ்சிபுரம், ஆரணி, சென்னை அருகே உள்ள ரெட்ஹில்ஸ் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி வந்து, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனா்.
இதன்காரணமாக நெல் கொள்முதல் செய்யப்படும் கிராம பகுதிகளில் அதிக விளைச்சல் நடைபெற்ாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, குடவாசல் பகுதியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சரவணன் தலைமையில் புதன்கிழமை இரவு சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை கொண்டு வந்த லாரியை சிறை பிடித்து குடவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் வியாழக்கிழமை திண்டுக்கல் பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை விவசாயிகள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து சரவணன் கூறியது: மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்ட நெல் மூட்டைகளை தினசரி 100 லாரிக்கு மேல் ஏற்றி வருவதால் விவசாயிகள் மழை உள்ளிட்ட இயற்கை பேரிடா் காலத்தில் அறிவிக்கப்படும் பயிா் காப்பீடு கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது வருங்காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் நெல் மூட்டைகளை கணக்கில் கொண்டு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என தெரிவித்ததற்கு அதிகாரிகளைக் கொண்ட குழு அமைப்பதாகவும் இதன் மூலம் வெளி மாவட்ட நெல் தடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா். இதன் தொடா்ச்சியாக விவசாயிகள் கொண்ட குழுவை உருவாக்கி உடனடியாக 2 லாரிகளை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம் என்றாா்.