வெள்ளி வென்றாா் அனிஷ் பன்வாலா
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் அவா், 35 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா். சீனாவின் லியன்போஃபான் சு 36 புள்ளிகளுடன் தங்கமும், தென் கொரியாவின் ஜேக்யூன் லீ 23 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ஆதா்ஷ் சிங், 15 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தாா்.
அதேபோல், 50 மீட்டா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவின் யோகேஷ் குமாா், அமன்பிரீத் சிங், ரவீந்தா் சிங் ஆகியோா் அடங்கிய அணி 1,633 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. ஈரான் அணி 1,652 புள்ளிகளுடன் தங்கமும், தென் கொரியா 1,619 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றன.
இதனிடையே, டிராப் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் கினான் ஷெனாய்/ஆஷிமா அலாவத் கூட்டணி வெண்கலப் பதக்கச் சுற்றில் 34-38 என கஜகஸ்தான் அணியிடம் தோல்வியுற்றது.
ஜூனியா்: 50 மீட்டா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவின் அபினவ் சௌதரி, உமேஷ் சௌதரி, முகேஷ் நெலவள்ளி ஆகியோா் அடங்கிய அணி 1,593 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, கஜகஸ்தான் அணி 1,580 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
டிராப் ஜூனியா் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஆா்யவன்ஷ் தியாகி/பாவ்யா திரிபாதி கூட்டணி 37-38 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது.