பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மூன்று அணிகள்; 4-வது இடம் யாருக்கு?
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டுமா? ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், ‘அடுத்து என்ன படிப்பு, எந்த காலேஜ்’ என்ற அறிவுரைகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் பல வீடுகளிலும் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும்.
அந்த வகையில், எந்தக் காலத்திலும் மவுசு உள்ள ஒரு படிப்பு பற்றி இங்கு பார்க்கலாம். ஆம்... விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கான தேவை எக்காலத்திலும் நிரந்தரமானது, பல்வேறு தள வேலைவாய்ப்புகளை உள்ளடக்கியது. அவற்றைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்களுக்கான வழிகாட்டல் இங்கே...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) 2025 - 26 கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது.

எந்தெந்தப் படிப்புகள்?
B.Sc., (Hons.) - வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை (தமிழ் வழி), தோட்டக்கலை (தமிழ்வழி), வனவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து உணவுமுறை, பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை.
B.Tech., (Hons.) - வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிரித் தகவலியல், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம்.
மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எத்தனை இடங்கள்?
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருக்கும் 3,370 இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் இருக்கும் 4,405 இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீடுகள் உண்டு.
என்னென்ன வேலைவாய்ப்புகள்..?
* வேளாண் துறை மற்றும் வங்கிகளில் வேளாண் அலுவலர்கள்
* இந்திய ஆட்சிப்பணி
* தமிழ்நாடு அரசாங்க ஆட்சிப்பணி
* இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள்
* மத்திய கிடங்கு நிறுவனத்தில் தர கட்டுப்பாடு அதிகாரிகள்
* தேசிய விதை கழகத்தில் அதிகாரிகள்
* காபி, டீ, ரப்பர் வாரியங்களில் அதிகாரிகள்

* மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சி அதிகாரிகள்
* தேசிய மற்றும் பிராந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள்
* இந்திய உணவுக் கழக அதிகாரிகள்
* உணவு பதப்படுத்தும் தொழில்களில் அதிகாரிகள்
* நாற்றங்கால் மேலாளர்
* ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில்களில் அதிகாரிகள்
* விவசாயம் தொடர்பான தொழில்முனைவோர்
உரிய முயற்சிகளை மேற்கொண்டு தேர்ச்சி பெற்று, இவற்றில் பணிபுரியலாம்.
மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறும்?
மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, மதிப்பெண் அடிப்படையில் அவர்களது தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பின்னர், ஆன்லைன் கவுன்சலிங் நடக்கும். அதன் பின்னர் சீட் ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகள் இருக்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க...!
tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னான நடைமுறைகள் மற்றும் அதற்குண்டான தேதிகள் அதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி..?
ஆன்லைனில் வரும் ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் உண்டு. ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப இந்தக் கட்டணம் மாறுபடும்.

சந்தேகங்களுக்கு... தொடர்பு எண்கள்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 94886 35077, 94864 25076 என்ற தொலைபேசி எண்களிலும், சந்தேகங்களை ugadmissions@tnau.ac.in என்ற மெயில் ஐடியிலும் கேட்கலாம்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும்..!
வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பிக்கலாம். 340 இடங்கள் உள்ளன. இதுகுறித்த தகவல்களை மேலும் தெரிந்துகொள்ள 98657 03537 மற்றும் 94420 29913 தொலைபேசி எண்களிலும், agridean2015@gmail.com என்கிற மெயில் ஐ.டியிலும் தொடர்பு கொள்ளலாம்.