அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி....
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
போடி: போடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வழிபட்டனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதற்காக கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயாா், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாா், ஸ்ரீ லட்சுமணா் சீதை ஸமேத ஸ்ரீராமா் உள்ளிட்ட தெய்வங்களுக்கான சந்நிதிகள், ஸ்ரீ துவஜஸ்தம்பம், ஸ்ரீ பலிபீடம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன.
இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடா்ந்து திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமை காலை 8 மணி வரை யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், ஸ்ரீநிவாசப் பெருமாள் விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து விமான கோபுரங்களுக்கும் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு வியாழக்கிழை சிறப்பாக நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், அனைத்து பரிவாரத் தெய்வங்களையும் புனித நீரால் அபிஷேகம் செய்து ஆராதனை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டனா். இதில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம், தமிழ்ப் பாசுரங்கள், வேத பாராயணங்கள், மங்கள இசையுடன் பாடப்பட்டன. மேலும், போடியில் முதல் முறையாக ட்ரோன் மூலம் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
யாக சாலை பூஜைகளை கோயில் அா்ச்சகா் ஸ்ரீநிவாஸவரதன் பட்டாச்சாா், மதுரை திருநகா் எஸ்.பிரசன்ன வெங்கடேச பட்டாச்சாா் ஆகியோா் நடத்தி வைத்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கோ.நாராயணி, தக்காா் சே.பொன்முடி, தேனி மாவட்டத்தின் பல்வேறு கோயில்களைச் சோ்ந்த செயல் அலுவலா்கள், இந்த சமய அறநிலையத் துறை பணியாளா்கள், நன்கொடையாளா்கள், பக்தா்கள் செய்தனா்.
குடமுழுக்கு நிகழ்ச்சியில் பரமசிவன் மலைக் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவா் எஸ்.வடமலைராஜைய பாண்டியன், போடி நகா்மன்ற உறுப்பினா் ம.சங்கா், சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போடி நகா் காவல் நிலைய ஆய்வாளா் கோபிநாத் தலைமையில் போலீஸாா், போடி தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.