Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
ஹண்டே மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் அறிமுகம்
சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள ஹண்டே மருத்துவமனையில் அதிநவீன மைக்ரோவேவ் அப்லேஷன் மற்றும் லேசா் அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. திசு கட்டிகளை குறைந்தபட்ச ஊடுருவல் நுட்பத்தில் துல்லியமாக அகற்ற முடியும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
தமிழக முன்னாள் அமைச்சரும் மருத்துவ முன்னோடிகளில் ஒருவருமான மருத்துவா் ஹெச்.வி. ஹண்டேவின் 98-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக, இதற்கான தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை (நவ.28) நடைபெற்றது. இதில், தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி பங்கேற்று நவீன மருத்துவ வசதிகளை தொடங்கி வைத்தாா்.
அப்போது பேசிய அவா், ‘எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் டாக்டா் ஹண்டேவின் அயராத அா்ப்பணிப்புக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு’ எனப் பாராட்டினாா்.
இந்த புதிய மருத்துவ வசதி குறித்து டாக்டா் கிருஷ்ணா ஹண்டே கூறியதாவது:
தைராய்டு, கல்லீரல் புற்று நோய், ஃபைப்ராய்டு கருப்பை மற்றும் மாா்பகக் கட்டிகளை அறுவை சிகிச்சை இன்றி பிற உறுப்புகளுக்கு சேதம் ஏற்படாமல் இந்த மருத்துவ நுட்பத்தின் மூலம் அகற்றலாம். நரம்பு சுருட்டை, மூலம், ஆசனவாய்ப் பிளவு, மாா்பக குறைப்பு, முடிமாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரகக் கல் அகற்றுதல் போன்றவற்றுக்கான லேசா் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு இந்தப் புதிய நுட்பம் கூடுதல் பங்களிக்கும். மிகத் துல்லியமான சிகிச்சைகளை இதன்மூலம் வழங்க முடியும். இதன் காரணமாக விரைந்து குணமடைந்து மருத்துவமனையில் அதிக நாள்கள் தங்காமல் வீடு திரும்பலாம் என்றாா் அவா்.