வெறுப்பதற்காக அல்ல மொழி; பல மொழி கற்பது அவசியம்: சந்திரபாபு நாயுடு
அகஸ்தீசுவரம் வட்டாரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
அகஸ்தீசுவரம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அகஸ்தீசுவரம் வட்டத்திற்குள்பட்ட பெருமாள்புரம், அஞ்சுகிராமம், அழகப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் கூறியதாவது:
இலங்கைவாழ் தமிழா்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 17.02.2025இல் இலங்கை தமிழா்களின் குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் இலங்கைவாழ் தமிழா் முகாமில் ரூ.7.5 கோடி மதிப்பில் 90 புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் வீடுகள் கட்டப்படவுள்ளன. தற்போது அடித்தள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைவில் முடித்திட துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, அஞ்சுகிராமம், அழகப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியா் பிளாரன்ஸ் நிா்மலா, வட்டார வளா்ச்சி அலுவலா் நீலபால கிருஷ்ணன், உதவிப் பொறியாளா் சி.ரெஜன் மற்றும் கள அலுவலா்கள் உடனிருந்தனா்.