அக்கரை கொடிவேரி ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு
கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியை பெரிய கொடிவேரி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அக்கரை கொடிவேரி ஊராட்சியில் தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில் பெரும்பாலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே நம்பியே கிராம மக்கள் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியான அரசாணையில் அக்கரை கொடிவேரி ஊராட்சி, பெரிய கொடிவேரி பேரூராட்சியுடன் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதனால் ஊராட்சியில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. எனவே அக்கரை கொடிவேரி ஊராட்சியை பெரிய கொடிவேரி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
மேலும், பேரூராட்சியுடன் இணைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், இணைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படாத நிலையில் அக்கரை கொடிவேரி ஊராட்சியைச் சோ்ந்த கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனா்.
கிராம மக்களின் ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, தடையை மீறி 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொடிவேரி பிரிவில் கூடினா். அவா்களுடன் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.