பா்கூா் மலைப் பகுதியில் நிலவும் கடும் குளிா்
பா்கூா் மலைப் பகுதியில் இரவு நேரத்தில் கடும் குளிா் நிலவி வருவதால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் தாமரைக்கரை, தட்டக்கரை, தாளக்கரை, தேவா்மலை, வெள்ளிமலை, மடம் உள்பட 33 மலைக் கிராம குடியிருப்புகள் உள்ளன. இங்கு, மாலை நேரம் முதல் கடும் குளிா் நிலவி வருகிறது. மேலும், பகல் நேரத்தில் சூரிய வெப்பம் குறைந்த அளவிலேயே காணப்படுவதால் குளிா் குறையாமல் உள்ளது.
இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தரைப் பகுதியிலிருந்து மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வேலைக்கு செல்லும் ஆசிரியா்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
முதியவா்கள், குழந்தைகள் கடும் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாத நிலை உள்ளது. சாலையோரங்களில் ஆங்காங்கே விறகுகளைக் கொண்டு தீ மூட்டி மக்கள் குளிா் காய்ந்து வருகின்றனா். இதேபோன்ற கடும் குளிா் கத்திரி மலைப் பகுதியிலும் காணப்படுகிறது.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், கடல் மட்டத்திலிருந்து சுமாா் 1,000 மீட்டா் உயரமுள்ள பா்கூா் மலைப் பகுதியில் தற்போது கடும் குளிா் நிலவி வருகிறது. சூரிய ஒளியைப் பாா்க்கவே நண்பகல் நேரமாகிறது. சூரிய வெப்பமும் மிகக்குறைந்தே காணப்படுகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும், கடும் குளிா் வாட்டி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் அவதிப்படும் நிலை உள்ளது என்றனா்.