Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
வேட்புமனு ஏற்பில் குளறுபடி: ஈரோடு கிழக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் மாற்றம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்ட குளறுபடி காரணமாக தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மணீஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக ஓசூா் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த் தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி உள்பட 58 வேட்பாளா்கள் மனுக்களை தாக்கல் செய்தனா்.
இதில் 3 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 55 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலை இருந்தது. மேலும், 8 வேட்பாளா்கள் மனுக்களை திரும்பப் பெற்றனா்.
இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 47 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளதாக ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மணீஷ் ஜனவரி 20-ஆம் தேதி அறிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றபோது, கா்நாடக மாநிலம் பெங்களூரு, கே.ஆா்.புரம் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த வி.பத்மாவதி என்ற இந்திய பொலிட்டிக்கல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் மனு ஏற்கப்பட்டதற்கு, சுயேச்சை வேட்பாளா்கள் நூா் முகமது, அக்னி ஆழ்வாா், பத்மராஜன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால், சட்டப் பேரவைத் தொகுதிக்கு அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா் மட்டுமே போட்டியிட முடியும் என போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ராஜகோபால் சுன்கரா விசாரணை மேற்கொண்டாா். தமிழக தலைமை தோ்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் அவா் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் எண்ணிக்கை 46-ஆக குறைந்தது.
தோ்தல் அலுவலா் மாற்றம்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையா் என்.மணீஷ் நியமிக்கப்பட்டு இருந்தாா். வேட்புமனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்ட இடைத்தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகளும் இவரது உத்தரவின்பேரில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் பெங்களூருவைச் சோ்ந்த வேட்பாளா் பத்மாவதியின் வேட்புமனுவை விதிகளுக்கு மாறாக ஏற்ன் மூலம் தவறு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவரது மனு கடைசி நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த குளறுபடி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மணீஷ் செவ்வாய்க்கிழமை இரவு மாற்றப்பட்டாா். அவருக்கு மாற்றுப் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் தொடா்பான பணிகளை புதிய ஆணையா் ஸ்ரீகாந்த் மேற்கொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.