`அஜித் பவாருக்கே கடிகாரம் சின்னம்'- கைவிட்ட சுப்ரீம் கோர்ட்... சரத் பவாருக்குப் பின்னடைவு!
மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவரது சகோதரர் மகன் அஜித் பவார் கடந்த ஆண்டு இரண்டாக உடைத்தார். அவர் இப்போது பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்து துணை முதல்வராக இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் அஜித் பவாருக்கு ஆதரவாக சென்றதால் தேர்தல் கமிஷன் அஜித் பவார் தலைமையிலான அணியை உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அறிவித்து, அக்கட்சியின் சின்னமான கடிகாரத்தையும் அஜித் பவார் அணி பயன்படுத்த அனுமதி கொடுத்தது. அதேசமயம் சரத் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) என்ற கட்சியும், வேறு சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த மக்களவை தேர்தலில் சரத் பவார் தலைமையில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் 8 பேர் வெற்றி பெற்றனர்.
சரத் பவார் ஏற்கனவே தங்களது கட்சி சின்னத்தை அஜித் பவாருக்கு கொடுக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு நிலுவையில் இருந்து வந்தது. இதற்கு முன்பு விசாரணைக்கு இம்மனு விசாரணைக்கு வந்த போது அஜித் பவார் அணிக்கு சில உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்து இருந்தது. அதனை அஜித் பவார் அணி சரியாக பின்பற்றவில்லை என்று தெரிகிறது. தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அஜித் பவார் அணியினர் கோர்ட் உத்தரவை மீறுவதாகவும், எனவே கடிகாரம் சின்னத்தை முடக்கிவிட்டு அவர்களது அணிக்கு வேறு சின்னம் கொடுக்கவேண்டும் என்று கோரி சரத் பவார் தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
தங்களது மனுவை அவசரமாக விசாரிக்கவேண்டும் என்று சரத் பவார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இம்மனு இன்று நீதிபதிகள் சூர்யகாந்த், திபன்கர் தத்தா, உஜால் பூயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் சரத் பவார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட் இதற்கு முன்பு பிறப்பித்த உத்தரவில் கடிகாரம் சின்னம் ஒதுக்கீடு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று விளம்பரங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அஜித் பவார் தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தது. அதோடு ஆடியோ மற்றும் வீடியோ, துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்யும் போது இதனை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் அஜித் பவார் தரப்பு அந்த உத்தரவை மீறுவதாகவும், இதனால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதாகவும் சரத் பவார் தரப்பில் வாதிட்டனர். எனவே கடிகாரம் சின்னத்தை அஜித் பவார் அணிக்கு ஒதுக்கியதை திரும்ப பெறவேண்டும் என்றும் வாதிட்டனர். ஆனால் அஜித் பவார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிவிட்டதாகவும், எனவே சின்னத்தை மாற்றுவது சரியாக இருக்காது என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சரத் பவார் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். கடிகாரம் சின்னம் தொடர்ந்து அஜித் பவார் அணியிடமே இருக்கும் என்றும், அதேசமயம் அஜித் பவார் தரப்பு விளம்பரங்களில் கோர்ட் சொன்னபடி தகவல்கள் இடம் பெறவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக உறுதிமொழி கொடுக்கவேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்பட்டால் கோர்ட்டே அதனை மனுவாக எடுத்து விசாரிக்கும். எனவே அது போன்ற ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளவேண்டாம் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பு சரத் பவாருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சரத் பவார் சுப்ரீம் கோர்ட்டை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார். சுப்ரீம் கோர்ட் சரத் பவாருக்கு சாதகமாக செயல்பட்டால் அதனை காரணம் காட்டி உத்தவ் தாக்கரேயும் சுப்ரீம் கோர்ட் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் இரண்டு பேரது ஆசையும் நிராசையாகிவிட்டது.