“அஜித் வாழ்க, விஜய் வாழ்க...” இது வேண்டாமே! -அஜித் அறிவுரை
சினிமா ரசிகர்கள் படம் பார்ப்பது சரிதான். ஆனால், அதற்காக “அஜித் வாழ்க, விஜய் வாழ்க...'' என்று சண்டை போடுவது சரியானதல்ல என்று அறிவுரை வழங்கியுள்ளார் நடிகர் அஜித் குமார்.
துபையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்று 3-ஆவது இடம்பிடித்து சாதித்துக் காட்டியுள்ள அஜித் குமாரின் அணியையும் அவரையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழையில் நனைய வைத்துவிட்டனர்.
இந்த நிலையில், கார் பந்தயத்துக்குப்பின் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், ``அஜித் வாழ்க, விஜய் வாழ்க... சரி, நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள். முதலில் உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள்..'' என்று ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை வழங்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இப்போது அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த காணொலி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பையும் அவர்களது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படி, நல்ல விஷயத்தை அஜித் சொன்னதால், நிச்சயம் நிறைய பேர் இதனைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வார்கள் என்று பலரும் அஜித்தை பாராட்டி பேசி வருகின்றனர்.