``அடுத்து வருபவர்கள் நல்லா பண்ணுவார்கள் தலைவா!" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஏழை இஸ்லாமியர்கள் பயனடைவார்கள். வழக்கம்போல சில அரசியல் கட்சிகள் இதை வைத்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சில கட்சி போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள்.

வக்பு வாரியத்தின் சொத்தை திமுக பிரமுகர் பறித்து வைத்ததை எதிர்த்த காரணத்தால்தான் திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டார். முதலமைச்சர் சிறுபான்மை மக்களிடையே பயத்தை ஏற்படுத்தும் வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்.
மருதமலை கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இது முருக பெருமானுக்கு நடந்த கும்பாபிஷேகமா அல்லது திமுகவினர் அவர்களுக்காக நடத்திய மாநாடா என்று சந்தேகமாக உள்ளது. பக்தர்களை எல்லாம் நேற்றில் இருந்து படிக்கட்டு கூட ஏறவிடவில்லை. அமைச்சர் சேகர் பாபுவின் மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினரை போலீஸ் எஸ் கார்ட் போட்டு கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

700க்கும் மேற்பட்ட சிறப்பு பாஸ்களை திமுகவினருக்கு மட்டுமே வழங்கியுள்ளனர். முருகப்பெருமானை அவமானப்படுத்தியுள்ளனர். துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதைவிட அவர்களுக்கு வேறு என்ன வேலை.
பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கும். அதன் பிறகு அதுகுறித்துப் பேசுகிறேன். புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்தக் கட்சி நன்றாக இருக்கவேண்டும். பாஜகவில் தலைவர் பதவிக்கு போட்டி எல்லாம் இல்லை. எல்லோரும் சேர்ந்து ஏக மனதுடன் ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்வார்கள். ஊழலுக்கு எதிராக வந்தவன் நான். எதையும் சமரசம் செய்ய மாட்டேன். தேசிய கட்சியை சேர்ந்தவன் நான். அதனால் எல்லவாற்றையும் பார்க்க வேண்டும். ஒரு தொண்டனாக தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வேன்.” என்றவரிடம், “மத்திய அமைச்சர் ஆகப் போகிறீர்களா” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அண்ணாமலை, “என்னை இங்கிருந்து பேக் செய்வது அனுப்புவதிலேயே குறியாக இருக்காதீர்கள். டெல்லி சென்றாலும் ஓர் இரவு இருந்துவிட்டு வந்துவிடுவேன். இந்த மண்ணில் தான் இருப்பேன்.” என்றவர் செய்தியாளர்கள் இதுகுறித்து மேற்கொண்டு எழுப்பியதற்கு, “அடுத்து வருபவர்கள் நல்லா பண்ணுவார்கள் தலைவா.” என்று கூறி சென்றார்.