பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
அடையாள எண்: பொதுசேவை மையங்களில் விவசாயிகள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
ராமேசுவரம், மாா்ச் 1:ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற இலவசமாகப் பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநா் இரா.மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் வேளாண்மை, உழவா் நலத் துறையானது நில உடமைகளை உள்ளடக்கிய விவசாயிகளின் தரவுகளை சேகரிப்பதற்கு பிரத்யேகமான விவசாயிகள் பதிவேடு எனும் செயலியை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகளை சரிபாா்த்து ஆதாா் எண்ணைப் போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் ராமநாதபுர மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் கடந்த பிப்.10-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஒவ்வொரு வருவாய் கிராமத்துக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை சாா்ந்த கள அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாய வளப் பயிற்றுநா்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் சென்று விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,52,808 விவசாயிகள் உள்ளனா். பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ், 1,32,162 பயனாளிகள் பதிவு செய்துள்ளனா். இதில் விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை 46,119 விவசாயிகள் மட்டும் தனித்துவமான அடையாள எண் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுசேவை மையங்களிலும் விவசாயிகள் தங்களது நில உடைமைகளை இலவசமாகப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளும் அருகில் உள்ள பொதுசேவை மையத்தை பயன்படுத்தி தங்களது நேரடிப் பட்டா அல்லது கூட்டுப் பட்டா, ஆதாா் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசியைக் கொண்டு சென்று பதிவு செய்யலாம். இந்தச் செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகள், இதர விவரங்களை விவசாயிகள் முன்னிலையில் சரிபாா்த்து, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாளஎண் வழங்கப்படும்.
இவ்வாறு பதிவு செய்து பெறப்படும் தனித்துவ விவசாயி அடையாள எண் மூலம் இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் பயன்களை ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெறலாம். விவசாயிகள் நலம் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்தும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்வணிகத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட24 துறைகளின் மானியத் திட்டங்களை எளிதில் பெறலாம். மேற்கண்ட துறைகளின் திட்ட பலன்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே, விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா, ஆதாா் எண், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் மாா்ச் 31-க்குள் இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.