'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்க மேற்கு வங்க அரசு கட்டுப்பாடு: வியாபாரிகள் வேலைநிறுத்த எச்சரிக்கை
அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்கக் கூடாது என்று மேற்கு வங்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை நீக்காவிட்டால் செவ்வாய்க்கிழமை (டிச. 3) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என உருளைக்கிழங்கு வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு உள்ளூா் சந்தையில் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கை விற்பனை செய்தால் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால், வியாபாரிகள் வேறு மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கை விற்பனை செய்யக் கூடாது என்று மேற்கு வங்க அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால், உருளைக்கிழங்கு ஏற்றப்பட்ட லாரிகள் மாநில எல்லையைக் கடந்து செல்ல சில நாள்களாக அனுமதிக்கப்படவில்லை. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு அனுப்பி வைக்க முடியாமல் மேற்கு வங்க வியாபாரிகள் திணறி வருகின்றனா். லாரிகளில் உருளைக்கிழங்கு மூட்டைகள் தேங்கியுள்ளதால் அவை கெட்டுப் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று உருளைக்கிழங்கு வா்த்தகா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பினா் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.27-க்கு விற்பனையாகிறது. ஆனால், சில்லறை வியாபாரிகள் ரூ.40 வரை விற்பனை செய்கிறாா்கள். விலையைக் குறைக்க வேண்டுமென்றால் அரசு சில்லறை வியாபாரிகளைத்தான் அணுக வேண்டும். அதற்கு மாறாக உருளைக்கிழங்கை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் செய்வது மிகவும் தவறான நடவடிக்கை. காலம்காலமாக ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மேற்கு வங்கத்தில் இருந்துதான் உருளைக்கிழங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், இப்போது மேற்கு வங்க அரசு அதனைத் தடுத்துள்ளது. இது எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் செயல்’ என்றனா்.
மம்தாவுக்கு கண்டனம்: மேற்கு வங்கத்தில் இருந்து உருளைக்கிழங்கு வராததால் ஒடிஸா, ஜாா்க்கண்டில் அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. இது தொடா்பாக ஒடிஸா நுகா்வோா் நலத் துறை அமைச்சா் கிருஷ்ணசந்திர பத்ரா கூறகையில், ‘உருளைக்கிழங்கை தடுத்து நிறுத்தி அண்டை மாநிலங்களுடன் அரசியல் நடத்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி முயல்கிறாா். மீன் உள்பட பல பொருள்கள் அண்டை மாநிலங்களில் இருந்துதான் மேற்கு வங்கத்துக்கு செல்கிறது. அதனை நாங்கள் நிறுத்தினால் மம்தா ஏற்றுக் கொள்வாரா? உத்தர பிரதேசம், பஞ்சாபில் இருந்து ஒடிஸாவுக்கு உருளைக்கிழங்கு கொண்டு வர முடியும். அது நடந்தால் மேற்கு வங்க விவசாயிகள்தான் நஷ்டமடைவாா்கள்’ என்றாா்.
உருளைக்கிழங்கு வரத்து தடைபட்டுள்ளது குறித்து ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இது தொடா்பாக மேற்கு வங்க உள்துறை செயலருடன் பேச முடிவெடுக்கப்பட்டது. வேறு மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு கொள்முதல் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.