சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
அண்ணா பல்கலை.யில் ரூ.68 கோடி ஊழல்: அரசு நடவடிக்கை எடுக்கும்
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.68 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக பொதுக்கணக்குக் குழு தெரிவித்த தகவல் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் உறுதியளித்தாா்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில் அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தொடா்பான பிரச்னை எழுப்பப்பட்டது. இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் உறுப்பினா் ஆா்.ஈஸ்வரன் பேசினாா். அப்போது, சட்டப் பேரவையின் பொதுக் கணக்கு குழு சாா்பில் அண்ணா பல்கலை. கணக்குகளை ஆய்வு நடத்தச்
சென்றோம். அதில், யாருக்கும் தெரியாமல் ரூ.68 கோடி அளவுக்கு குளறுபடிகள் நடந்துள்ளன. ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் அண்ணா பல்கலை. இருந்த போதுதான் இந்த குளறுபடி நடந்துள்ளது. பல்கலைக்கழகம் கட்டுப்பாடு இன்றி நடைபெறுவதற்கு காரணம், அங்கு துணைவேந்தா் இல்லாததுதான் என்றாா்.
அதிமுக உள்ளிட்ட உறுப்பினா்களின் பேச்சுகளைத் தொடா்ந்து, உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது: பொதுக் கணக்குக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினா் ஈஸ்வரன், அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.68 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறாா். இதுகுறித்த விவரங்களை பொதுக்கணக்குக் குழுவிடமிருந்து பெற்று உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்றாா்.