Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண...
அதிமுக திட்டங்களுக்கு பெயர் சூட்டிக் கொள்கிறதா திமுக? - குற்றச்சாட்டும் பின்னணியும்!
அ.தி.மு.க கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
`கலைஞர், ஜெ. ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள்’
தி.மு.க கொண்டுவந்த திட்டங்களை ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு அதிமுக பெயர் மாற்றுவதும், அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக பெயர்மாற்றுவதும் காலங்காலமாக நடந்துவருகின்றன. குறிப்பாக, 1997-ல் கருணாநிதி கொண்டுவந்த `நமக்கு நாமே' திட்டத்தை, 2001-ல் ஆட்சிக்குவந்த ஜெயலலிதா `கிராம தன்னிறைவு திட்டம்' என்று பெயர்மாற்றினார். மீண்டும் 2006-ல் ஆட்சிக்குவந்த தி.மு.க, முந்தைய ஜெயலலிதா ஆட்சித்திட்டங்களை கிடப்பில்போட்டு, தன்னுடைய திட்டங்களுக்கு புத்துயிரூட்டியது. அதேபோல, தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டங்களை, 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, `பசுமை வீடுகள் திட்டம், அம்மா மருத்துவக்காப்பீட்டு திட்டம் என்றும் பெயர்மாற்றம் செய்தார். மேலும், தி.மு.க-வின் அண்ணா மறுமலர்ச்சி திட்டமும் கூட, தாய் திட்டமாக உருமாறியது.
`ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்கிறதா?’
அந்தவரிசையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் தி.மு.க ஆட்சி ஏற்பட்டதும், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட `அம்மா சிமெண்ட்'டை வலிமை சிமெண்ட் என்றும், அம்மா கிளினிக்குக்கு மாற்றாக மக்களைத்தேடி மருத்துவம் என்றும் புதிய பெயரில் புதிய திட்டமாகக் கொண்டுவரப்பட்டன. ஏன், அம்மா உணவகத்துக்குப் போட்டியாக கலைஞர் உணவகம் தொடங்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படி பெயர் மாற்ற அரசியல் ஒருபுறமிருக்க, கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தன்னுடைய ஆட்சியின் திட்டமாகக் கூறி திறப்பு விழா நடத்துவதும், கடந்த ஆட்சியின் திட்டம் என்பதற்காகவே கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடுவதும்கூட இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் செய்துகொள்ளும் அரசியலாகவே இருந்து வருகின்றன.
`ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக’ - குற்றம்சாட்டும் அதிமுக:
அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்துக் கொண்டிருப்பதாகவும், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்காகவே சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் ஓர் நீண்ட பட்டியல் வாசித்த எடப்பாடி பழனிசாமி, ``அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசாங்கம் ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைக்கிறது. குறிப்பாக, கோவையில் ரூ.750 கோடி திட்ட மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் உதயநிதியால் 11.02.2024 அன்று திறக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம். அதேபோல, ரூ. 479 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் - உக்கடம் வரையிலான மேம்பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு திமுக ஆட்சி திறக்கப்பட்டது.
தொடர்ந்து, ரூ. 114 கோடியில் கோவை ஐ.டி. பார்க் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த நவம்பர் 5-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கப்பட்டது. சுமார் ரூ.1652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் வேகமாக துவங்கி கிட்டத்தட்ட 85 சதவீத பணிகள் முடிவடையும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு 32 மாத காலங்கள் திமுக ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு நானும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததன் அடிப்படையில் தாமதமாக திட்டத்தை தொடர்ந்தார்கள். ஆனால், இன்னமும் இந்த திட்டம் முழுமை பெறவில்லை.
கிடப்பில் போடப்படும் திட்டங்கள்:
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்காகவே இன்றைக்கு பல திட்டங்கள் அமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் ரூ. 1650 கோடியில் கோவையில் உப்பிலிபாளையம் - ஏர்போர்ட் கோல்ட்வின்ஸ் இடையேயான உயர்மட்ட மேம்பாலம் தமிழ்நாட்டிலேயே மிக அதிக தூரமான மேம்பாலம்; சுமார் 10.1 கிலோமீட்டர் தூரம் உடையது. இந்தத் திட்டமும் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன அந்தப் பணியும் இந்த ஆட்சியாளர்களால் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கோவை மெட்ரோ ரயில் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம் - 2 என பல்வேறு திட்டங்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கிடப்பில் போடப்பட்டது. விமான நிலையம் விரிவாக்கத் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் 95 சதவீதம் நிலம் எடுப்பு பணிகள் முடிவடைந்து விட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது . இப்படி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ஒன்று பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. அப்படி இல்லையென்றால் கிடப்பில் போட்டு விடுகிறது! அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தான் பணி நிறைவுற்று ஸ்டாலின் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் நிலைமை!" எனக் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எல்லாவற்றுக்கும் கலைஞர் பெயரா?
மேலும் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ``மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது. சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது. மு.க. ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன" என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
தி.மு.கவின் பதில் என்ன?
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின், ``2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை அ.தி.மு.க. தந்ததாகவும்; அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை கொண்டு வந்து, அவர் மறைவிற்குப் பிறகு நான்கு ஆண்டு தான் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும் சிரிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார் பழனிசாமி. பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது. இன்னும் பளிச்சென்று அம்பலப்பட்டு போகும்!" என விமர்சித்திருக்கிறார்.
அதேபோல, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ``மக்கள் நல திட்டங்களுக்கு யார் பெயரை வைக்க வேண்டுமோ அவர் பெயரைத்தான் வைக்க வேண்டும். விமர்சனங்கள் வருவதால் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரை வைக்காமல் இருக்க முடியாது! வேறு யார் பெயரை வைப்பது...யாருடைய பெயர் வைக்க வேண்டுமோ அவரின் பெயரை தான் வைக்கிறோம்!" என பதில் கொடுத்திருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் திமு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கம், ``அம்மா உணவகம், குடிநீர், உப்பு, மருந்தகம், காய்கறிக் கடை, சிமெண்ட் இவை அனைத்தும் அம்மா'வே முதலமைச்சராக இருந்து 'அம்மா'வே தனது பெயரில் வைத்துக் கொண்டவை ஆகும். பழனிசாமி அறிக்கைப்படி சொல்வதாக இருந்தால், உதவாத திட்டங்களை அவர் பெயரிலேயே வைத்துக் கொண்டாரா ஜெயலலிதா?" என காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...