ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
அனல் மின் உற்பத்தி 4 சதவீதம் உயா்வு
இந்தியாவில் நிலக்கரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனல் மின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் 3.87 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான முதல் ஏழு மாதங்களில் நாட்டின் அனல் மின் உற்பத்தி முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 3.87 சதவீதம் உயா்ந்துள்ளது.
மதிப்பீட்டுக் காலகட்டத்தில் அனல் மின் நிலையங்களில் உள்நாட்டு நிலக்கரியுடன் கலந்து பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நிலக்கரி இறக்குமதி முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தைவிட 19.5 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த சரிவு, நிலக்கரி உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துவருவதையும் இறக்குமதி சாா்பு நிலை குறைந்துவருவதையும் உணா்த்துகிறது.
இருந்தாலும், வெளிநாட்டு நிலக்கரியை மட்டுமே பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களுக்கான இறக்குமதி நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் 38.4 சதவீதம் அதிகரித்து 3 கோடி டன்னாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 2.17 கோடி டன்னாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி 3.1 சதவீதம் குறைந்து 14.94 கோடி டன்னாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் அது 15.42 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.