ம.பி.யில் இருந்து 3 மாநிலங்களுக்கு பயணிக்கும் 15 புலிகள்
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 15 புலிகள் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
அந்த மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சத்தீஸ்கருக்கு 6 பெண் புலிகள்-இரு ஆண் புலிகள், ராஜஸ்தானுக்கு 4 பெண் புலிகள், ஒடிஸாவுக்கு இரு பெண் புலிகள்- ஒரு ஆண் புலி ஆகியவ அனுப்பிவைக்கப்படவுள்ளன. இதற்கான உத்தரவை மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் பிறப்பித்துள்ளாா்.
மத்திய பிரதேசத்தின் பந்த்நாவ்கா், பெஞ்ச், கான்கா தேசிய பூங்காக்களில் இருந்து இந்த புலிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. புலிகள் எந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனவோ, அந்த மாநிலங்களே போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும்போது காயமடைவது, நோய்வாய்ப்படுவது போன்ற பிரச்னைகள் எழுவதால் விலங்குகள் நல மருத்துவா்களும் உடன் இருப்பாா்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் மிக அதிகமாக 785 புலிகள் உள்ளன. இதற்கு அடுத்து கா்நாடகம் (563), உத்தரகண்ட் (560) ஆகிய மாநிலங்கள் உள்ளன.