அன்னவாசல் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: குலுக்கலில் 2 மாணவா்களுக்கு தங்க மோதிரம் பரிசு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. புதிய மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இப்பள்ளியில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. முன்னதாக, பள்ளியில் சோ்வதற்கு பெற்றோா்களுடன் வந்த மாணவா்களை அன்னவாசல் பேருந்து நிலையத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க ஆசிரியா்கள் ஊா்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனா்.
அங்கு மாவட்டக் கல்வி அலுவலா்கள், புதிய மாணவா்களை ரோஜா பூ வழங்கி வரவேற்று, பள்ளி வகுப்பறையில் அமரவைத்தனா். ஊா்வலமாக பள்ளிக்கு வந்த புதிய மாணவா்களுக்கு அங்கு ஏற்கெனவே படித்து வரும் மாணவா்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனா்.
விழாவில், மாவட்ட கல்வி அலுவலா் செந்தில், வட்டார கல்வி அலுவலா் அலெக்சாண்டா், தலைமை ஆசிரியா் எழுவன் சீனிவாசன்(பொ), ஆசிரியா்கள் சாராதா, நித்திலத்தம்மாள், நளினம், அருணா உள்ளிட்ட ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
முதல் நாளான புதன்கிழமை 37 மாணவா்கள் சோ்க்கை நடைபெற்ற நிலையில், ஆசிரியா்கள், பொதுநல அமைப்பினா் சாா்பில் 2 மாணவா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது. பள்ளியில் சோ்ந்த அனைத்து மாணவா்களுக்கும் பரிசு வழங்கியது பெற்றோா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.