ஹரியானா: ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை; காவல்துறையில் சாதிய ஒடுக்குமுறைகள்; அதிர்ச்சிப்...
அபுதாபி சுற்றுலா விளம்பரம்: தீபிகா படுகோனே ஆடை மீதான ட்ரோல்களும் ரசிகர்களின் ஆதரவும்; பின்னணி என்ன?
சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர சிங்குடன் அபுதாபி சுற்றுலா விளம்பரத் தூதராகச் சேர்ந்தார். அவர் விளம்பர தூதராகச் சேர்ந்தவுடன் அவர் அபுதாபியில் உள்ள சுற்றுலா தலங்களைப் பார்வையிடுவது போன்ற ஒரு விளம்பர வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஆரம்பத்தில் இருவரும் அபுதாபியில் உள்ள பழமையான Louvre Abu மியூசியத்தைச் சுற்றிப் பார்த்தபடி அதன் அற்புதங்கள் குறித்துப் பேசிக்கொள்வர். இருவரும் வழக்கமான வெஸ்டர்ன் ஆடைகளை அணிந்திருந்தனர்.
அதன் பிறகு இருவரும் ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்குச் செல்வர். அங்குச் செல்லும்போது தீபிகா படுகோனே தனது உடல் முழுவதையும் மறைத்து முகம் மட்டும் தெரியும் வகையில் உடை அணிந்து இருந்தார். அவர் தலையைக்கூட மறைத்திருந்தார்.
இது போன்ற ஆடையுடன் அவர்கள் விளம்பர வீடியோவில் நடித்திருந்தனர். இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைத்தளப் பக்கத்தில் தீபிகா படுகோனேயை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

தீபிகா படுகோனே ஹிஜாப் அணிந்திருப்பதாக சிலர் விமர்சனம் செய்தனர். அதேசமயம் தீபிகா படுகோனேயின் ரசிகர்கள் தீபிகா படுகோனேயின் செயலை நியாயப்படுத்தி இருக்கின்றனர்.
தீபிகா படுகோனே கலாசாரத்திற்கு மதிப்பு கொடுப்பவர் என்றும், அபுதாபி சுற்றுலா விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு நடித்து இருப்பதாகவும், ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்கு வரும் அனைத்து பெண்களும் இது போன்று உடை அணியவேண்டும் என்றும் தங்களது பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
அதோடு திருமண நாள், குழந்தை பிறந்தது உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் தீபிகா படுகோனேயும், அவரது கணவரும் பல கோயில்களுக்குச் சென்று வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர். பலர் தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு தங்களது முதல் திருமண நாளைக் கொண்டாட இருவரும் பஞ்சாபில் உள்ள பொற்கோயில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் சென்று வந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றபோது தீபிகா படுகோனே காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்திருந்தார். இருவருக்கும் குழந்தை பிறக்கும் முன்பு மும்பையில் உள்ள சித்தி விநாயக் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.