அமெரிக்காவைப் பின்பற்றி பாகிஸ்தானும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியத் தூதா் வலியுறுத்தல்
மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூா் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்ட நிலையில், பாகிஸ்தானும் அதனைப் பின்பற்றி ஹஃபீஸ் சையது, ஜக்கியுா் ரஹ்மான் லக்வி, சஜீத் மீா் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இந்தியத் தூதா் ஜே.பி.சிங் தெரிவித்தாா்.
இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அந்த நடவடிக்கை முடிந்துவிடவில்லை. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கினால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பஹல்காமில் சுற்றுலாவுக்கு வந்த அப்பாவி மக்களை அவா்களின் மதத்தை கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனா். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே இந்தியா தகா்த்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப் படை நிலைகளையும், எல்லையோர அப்பாவி மக்களையும் குறிவைத்தது. இதற்கு இந்தியத் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது.
இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புகள்தான் உள்ளன.
மும்பையில் புகுந்து லஷ்கா் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் யூதா்கள் உள்பட வெளிநாட்டவா் பலா் கொல்லப்பட்டனா். இதற்கு காரணமானவா்கள் பாகிஸ்தானில் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனா். இந்தியாவுடன் நல்லுறவு வேண்டுமானால் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.
மும்பை தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்ட பயங்கரவாதி தஹாவூா் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்டது. அமெரிக்காவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பாகிஸ்தான் அரசும் ஹஃபீஸ் சையது, ஜக்கியுா் ரஹ்மான் லக்வி, சஜீத் மீா் உள்ளிட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.