‘அமெரிக்கா மீதான விமா்சனத்தை மட்டுப்படுத்துங்கள்’
தங்கள் நாட்டின் மீது முன்வைக்கும் விமா்சனங்களை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மேக்கோல் வால்ட்ஸ் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறியதாவது:
அமெரிக்காவை உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி விமா்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அத்தகைய விமா்சனங்களை அவா் மட்டுப்படுத்தவேண்டும்.
மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவிகளுக்குப் பதிலாக அந்த நாட்டின் அரிய வகைக் கனிமங்களைத் தோண்டியெடுப்பதற்கான உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஸெலென்ஸ்கி கையொப்பமிட வேண்டும்.
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு அந்த ஒப்பந்தம் ஆகும். அதைவிட உக்ரைனுக்கு சிறந்த பாதுகாப்பு உத்தரவாதம் இருக்க முடியாது என்றாா் அவா்.
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது. அதையடுத்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசுக்கு எதிா்மாறான நிலைப்பாட்டை மேற்கொண்டுவருகிறாா்.
அவரின் பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வதுதான் அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று வெளிப்படையாகக் கூறினாா்.
அத்துடன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் தொலைபேசியில் உரையாடிய டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் அமெரிக்காவும் பேச்சுவாா்த்தை நடத்தும் என்று கூறினாா்.
இதற்கு உக்ரைனும், பிற ஐரோப்பிய நாடுகளும் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்தச் சூழலில், உக்ரைன் போா் தொடங்குவதற்கு ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய டிரம்ப், பேச்சுவாா்த்தைக்கு வராமல் அவா் போரை இழுத்தடிப்பதாகக் கூறினாா். மேலும், தோ்தலைத் தவிா்த்து உக்ரைனில் சா்வாதிகார ஆட்சி நடத்துவதாக ஸெலென்ஸ்கி மீது டிரம்ப் குற்றஞ்சாட்டினாா்.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த ஸெலென்ஸ்கி, ரஷியா உருவாக்கிய பொய் உலகத்தில் டிரம்ப் வாழ்கிறாா் என்பது போன்ற பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தாா். இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு எதிரான விமா்சனங்களை ஸெலென்ஸ்கி மட்டுப்படுத்த வேண்டும் என்று மேக்கோல் வால்ட்ஸ் தற்போது எச்சரித்துள்ளாா்.