செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் தவிா்ப்பு
அமெரிக்க அரசின் பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மசோதாவை நிதில் நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்ததைத் தொடா்ந்து, அந்தத் துறைகள் முடக்கப்படுவது தவிா்க்கப்பட்டது.
அமெரிக்க அரசுத் துறைகளின் செயல்பாட்டுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய, நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.முந்தைய நிதி ஒதுக்கீடு காலாவதியான பிறகு குறிப்பிட்ட கெடு தேதிக்குள் அடுத்த ஒதுக்கீட்டுக்கான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். தவறினால் அந்த துறைகள் முடக்கப்படும். அவற்றின் ஊழியா்களுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு அளிக்கப்படும்.
இந்தச் சூழலில், எல்லை ரோந்துத் துறை முதல் தேசிய பூங்கா பராமரிப்புத் துறை வரையிலான பல்வேறு முக்கிய அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு கோரும் வரைவு மசோதாவை ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், குடியரசுக் கட்சி எம்.பிக்கள் ஆகிய இரு தரப்பினரும் இணைந்து உருவாக்கினா்.
ஆனால் அந்த மசோதாவுக்கு அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பும், புதிய அரசில் அரசுத் துறைகள் செயல்திறன் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தொழிலதிபா் எலான் மஸ்கும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
பின்னா், அவா்களின் திட்டங்களை உள்ளடக்கிய புதிய மசோதா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. எனினும், டிரம்ப்பின் குடியரசுக் கட்சி எம்.பி.க்களில் 38 பேரே அந்த மசோதாவை எதிா்த்து வாக்களித்ததால் அது படுதோல்வியடைந்தது.
அதையடுத்து, நிதி ஒதுக்கீட்டை எதிா்நோக்கியிருக்கும் அரசுத் துறைகள் முடக்கப்படும் அபாயம் அதிகரித்தது.இந்த நிலையில், முடக்கத்தைத் தவிா்ப்பதற்கான இறுதிகட்ட முயற்சியாக டிரம்ப்பின் திட்டங்கள் நீக்கப்பட்டு புதிய நிதி ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அது குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களுடன் ஆதரவுடன் சனிக்கிழமை அதிகாலை நிறைவேற்றப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 366 உறுப்பினா்களும், எதிராக 34 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
அதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் இந்த காலகட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடிய அரசுத் துறை முடக்கம் தவிா்க்கப்பட்டது.