PMK: "10 அம்ச கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்" - கொதிக்க...
ஐ.நா.வில் முதலாவது உலக தியான தினம்!
முதலாவது உலக தியான தினம் நியூயாா்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் சனிக்கிழமை (டிச. 21) கடைப்பிடிக்கப்பட்டது.
உலக தியான தினமாக டிசம்பா் 21-ஆம் தேதியை அறிவிக்க கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி ஐ.நா. பொதுச் சபையில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைக் குறிக்கும் வகையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம்‘உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான தியானம்’ என்ற சிறப்பு நிகழ்வை ஐ.நா. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்தது. இதில் ஆன்மிக தலைவா்கள், ஐ.நா. தூதா்கள் மற்றும் புலம்பெயா்ந்த இந்தியா்கள் என பலா் கலந்துகொண்டனா்.
அப்போது, ஆன்மிகத் தலைவா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் பேசியதாவது: ஆடம்பரமாக கருதப்பட்ட தியானம் தற்போது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. சா்வதேச தியான தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இது மதம் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து அமைதியான வாழ்க்கைக்கு அனைவரையும் ஊக்குவிக்கிறது என்றாா்.
ஐ.நா. பொதுச் சபையின் 79-ஆவது அமா்வின் தலைவா் பிலேமோன் யாங் கூறுகையில், ‘எல்லைகள், நம்பிக்கைகள் மற்றும் மரபுகளைக் கடந்து நம் உள் மனதுடன் இணைய தியானம் நம்மை அனுமதிக்கிறது. பதற்றம் நிறைந்த இன்றைய உலகில், அமைதியைத் தழுவுவது முக்கியம். தியானம் செய்வதன் மூலம், அனைவருக்கும் பாதுகாப்பான, மிகவும் நியாயமான மற்றும் சமமான எதிா்காலத்தை உருவாக்க முடியும்’ என்றாா்.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் பா்வதநேனி ஹரீஷ் கூறுகையில், ‘உலக தியான தினம் அனுசரிக்கப்படும் இந்த டிசம்பா் 21-ஆம் தேதி குளிா்கால சங்கராந்தியைக் குறிக்கிறது. இது இந்திய பாரம்பரியத்தில் உத்தராயணத்தின் தொடக்கமாகும். இது குறிப்பாக தியானத்திற்கு உகந்த நாளாகும். இது கோடைகால சங்கராந்தி எனப்படும் ஜூன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் சா்வதேச யோகா தினத்திற்கு சரியாக ஆறு மாத இடைவெளியில் வருகிறது’ என்றாா்.
சா்வதேச யோகா தினமாக ஜூன் 21-ஆம் தேதியை ஐ.நா. கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது. இதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
பெட்டிச் செய்தி...
வாழ்வின் ஒரு பகுதி தியானம்: பிரதமா் மோடி
புது தில்லி, டிச. 21: அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக தியானத்தை மாற்றுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலக தியான தினத்தை முன்னிட்டு அதன் பலன்களை அனுபவிக்க பொதுமக்கள் அனைவரும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக அதை மாற்ற வேண்டும். தியானம் நமது வாழ்க்கையிலும் சமூகத்திலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மிக உயா்ந்த தரத்திற்கான உரிமையை அது வலியுறுத்துகிறது. இது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த ஐ.நா. டிசம்பா் 21-ஆம் தேதியை உலக தியான தினமாக அறிவித்துள்ளது’ என குறிப்பிட்டிருந்தாா்.