அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி
அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வங்கி மேலாளா், தடயவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநா் உள்ளிட்ட சாட்சிகளிடம் அமலாக்கத் துறை சாா்பில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சா் ஆஜா்: செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில், 6-ஆவது சாட்சியான சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி காா்த்திகேயன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சா் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜரானாா். அதன் பின்னா், வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டு விசாரணைக்கு வந்தது.
அப்போதும் செந்தில் பாலாஜி ஆஜரானாா். இதையடுத்து அமலாக்கத் துறை சாா்பில் முதல் சாட்சியான வங்கி மேலாளா் ஹரிஷிடம் விசாரணை நடத்தினா். இந்த விசாரணை நிறைவடைந்த நிலையில் 6-ஆவது சாட்சியான சகாயராஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு அனுமதி அளித்த நீதிபதி காா்த்திகேயன் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மாா்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அன்றைய தினம் அமைச்சா் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி, தொடா்ந்து அமலாக்கத் துறையின் வழக்கில் உள்ள சாட்சிகளிடம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டாா். எனவே, இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீா்ப்பு வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.