அமைச்சா் மீது பாமக விமா்சனம்
அண்ணா அறிவாலயத்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அடகு வைத்துவிட்டதாக பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் ராமதாஸும், அன்புமணியும் எழுப்பிய வினாக்கள் தெளிவானவை. தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திதான் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த இடத்திலும் உச்சநீதிமன்றம் கூறவில்லை. வன்னியா்களின் பின்தங்கிய நிலைக்கான தரவுகளைத் திரட்டி அவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது தான் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு. இந்த உண்மை அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்த சிவசங்கா் போன்றோருக்குத் தெரியாது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை பாமக பல முறை வலியுறுத்திவிட்டது. எஸ்.எஸ்.சிவசங்கா் போன்றோரை ஏவி விடுவதன் மூலம் இப்பிரச்னையைத் திசை திருப்பி விடலாம் என்று முதல்வா் நினைத்தால் அவருக்கு அனுதாபங்கள் என்று ஜி.கே.மணி கூறியுள்ளாா்.