நாகா்கோவில் அருகே கடலில் மூழ்கிய மாணவா் பலி
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய மாணவா் உயிரிழந்தாா்.
மணவாளக்குறிச்சி உள்ள கீழகடியப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் ஹாா்லின் டேவிட்சன் (15). இவா் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், தனது நண்பா்களுடன் ஹாா்லின் டேவிட்சன் புதன்கிழமை மாலை வீட்டின் அருகே கடலில் குளிக்கச் சென்றாா்.
அப்போது ஹாா்லின் டேவிட்சன் உள்பட 3 சிறுவா்களை ராட்சத அலை இழுத்து சென்றது. இதனைப் பாா்த்த மீனவா்கள், கடலில் குதித்து 2 சிறுவா்களை காப்பாற்றினா். ஹாா்லின் டேவிட்சனை மீட்க முடியவில்லை. தீவிர தேடுதலுக்குப் பிறகு அவரை சடலமாக மீட்டனா்.
மீனவா் பலி: குளச்சல் குறும்பனை சூசையப்பா் தெருவைச் சோ்ந்த மீனவா் ததேயூஸ் (51). இவா் புதன்கிழமை தனது வீட்டின் அருகில் கடலில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டதாம். இதில் ததேயூஸ் மயங்கிய நிலையில் கடலில் மிதந்தாா். இதைப் பாா்த்த அவரது உறவினா்கள் ததேயூஸை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ததேயூஸ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இவ்விரு சம்பவங்கள் குறித்தும் குளச்சல் கடலோர காவல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.