“அமைதியாக இருங்கள்...” கௌதம் கம்பீருக்கு முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அறிவுரை!
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடியும் வரை அமைதியாக இருங்கள் என கௌதம் கம்பீருக்கு இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கியுள்ளார்.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்த இந்திய அணி தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு மட்டுமின்றி, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கௌதம் கம்பீருக்கும் இந்த தொடர் மிக முக்கிய தொடராக மாறியுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
அமைதியாக இருங்கள்
ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு முறை பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றபோது, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ரவி சாஸ்திரி, பார்டர் - கவாஸ்கர் தொடர் தொடங்கும் முன்பு கௌதம் கம்பீருக்கு மிக முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ரவி சாஸ்திரி பேசியதாவது: முதலில் எந்தவொரு வெளிப்புற காரணிகளும் உங்கள் மீது எந்த ஒரு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தால் பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள். விரும்பத்தகாத ரியாக்ஷன் கொடுக்கும் கேள்விகளை அமைதியாக தவிர்த்திடுங்கள். அமைதியாக இருந்து உங்களது வீரர்களைப் பற்றி புரிந்துகொள்ளுங்கள். வீரர்களைப் புரிந்துகொண்டு அவர்கள் சிறப்பாக செயல்பட உதவியாக இருப்பது மிகவும் முக்கியம்.
இதையும் படிக்க: உங்களது எதிர்காலம் தெரிய வேண்டுமா? சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள்; கிண்டலடித்த முகமது ஷமி!
ஒவ்வொரு வீரரின் மனநிலையும் மாறுபட்டது. அவர்கள் அனைவரும் பல்வேறு விதமான கலாசாரம் மற்றும் பின்னணியில் இருந்து வருகிறார்கள். உதாரணமாக, ஒரு வீரர் யாரிடமும் அதிகம் பேசமால் அமைதியாக இருப்பவர் என்றால், சரியான உந்துதலும், நம்பிக்கையளிக்கும் பேச்சும் அவரை போட்டியை வென்று கொடுப்பவராக மாற்றும். ஒவ்வொரு வீரரையும் புரிந்துகொண்டு அவர்கள் சிறப்பாக செயல்பட உதவ வேண்டும்.
அணியில் யார் விளையாடினாலும், ஆஸ்திரேலிய அணி ஒருபோதும் இந்திய அணியை குறைத்து மதிப்பிடாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். ஆஸ்திரேலிய அணி கடந்த இரண்டு முறை அவர்களது சொந்த மண்ணில் தொடரை வெல்லவில்லை. அதனால், இந்த முறை தொடரை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் அவர்களிடம் இருக்கும் என்றார்.