அயோத்தி போன்ற பிரச்னைகளை வேறு எங்கும் எழுப்பாதீர்கள்! ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு
புணே: பல்வேறு இடங்களில் அயோத்தி போன்ற சர்ச்சைக் கருத்துகளை ஹிந்து அமைப்புத் தலைவர்கள் எழுப்புவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
புணேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன் பகவத் ‘விஸ்வகுரு பாரத்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை உரையாற்றினார்.
அப்போது, உத்தரப் பிரதேசத்தின் சம்பால் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மசூதி சர்ச்சைகளை குறிப்பிட்டு, “வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். கடந்த கால தவறுகளில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டு, உலக அரங்கில் நம் நாட்டை முன்மாதிரியாக மாற்ற பாடுபட வேண்டும்” என்றார்.
இதையும் படிக்க : சிறந்த நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சாய் பல்லவி! சர்வதேச திரைப்பட விழா விருது பட்டியல்!
’மற்ற கடவுள்களை அவமதிப்பது நமது கலாசாரம் அல்ல’
“ராமர் கோயில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அது கட்டப்பட வேண்டும் என்று ஹிந்துக்கள் கருதினர். ஆனால், வெறுப்பு மற்றும் பகைமையால் புதிய தளங்களில் பிரச்னையை எழுப்புவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்தியாவில் பல ஆண்டுகளாக சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு, வலிமை மற்றும் பிறரின் கடவுள்களை அவமதிப்பது நம் கலாச்சாரம் அல்ல.
இங்கு பெரும்பான்மையோ சிறுபான்மையோ இல்லை, நாம் அனைவரும் ஒன்றுதான். அனைவரும் இந்த நாட்டில் தங்கள் வழிபாட்டு முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
சில நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் சித்தாந்தங்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தது, அத்துடன் பயங்கரவாதமும் நாட்டில் நுழைந்தது” என்றார்.
‘பிற நாடுகளில் சிறுபான்மையினர் பற்றி கவலை தேவை’
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை குறிப்பிட்டு பேசிய மோகன் பகவத், “சிறுபான்மையினரை துன்புறுத்தும் நாடுகளில் அங்குள்ள சிறுபான்மையினர் குறித்து உலக நாடுகள் அக்கறை காட்ட வேண்டும்.
சிறுபான்மையினரின் மீதான அக்கறை குறித்து இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, தற்போது பிற நாடுகளில் சிறுபான்மையினர் எதிர்கொள்வது என்ன என்பதை பார்க்கின்றோம்” என்றார்.