2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்
அய்யம்பாளையத்தில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள அய்யம்பாளையத்தில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைச்சா் இ. பெரியசாமியின் 72-ஆவது பிறந்தநாள், தைப் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற இந்தப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான இ.பெ. செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். பெரியமாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு என 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
இதில், திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. போட்டியில், சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு ஓடி வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 70 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம், அய்யம்பாளையம் பேரூராட்சித் தலைவா் ரேகா அய்யப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாஸ்கரன், மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளா் அய்யம்பாளையம் அய்யப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.