பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
அரசமைப்பை ஆளுங்கட்சியின் தாக்குதலிலிருந்து காக்க குடியரசு நாளில் உறுதியேற்போம்! -கார்கே
குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘நமது அரசமைப்பின் மீது தொடர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருவதை வெளிக்காட்டுவதற்கான நேரமும் இதுதான். கடந்த பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ள நமது ஜனநாயக நிறுவனங்களை ஆளுங்கட்சி தொடர்ந்து சிதைத்து வருகிறது.
சுயாட்சி நிறுவனங்கள் மீது அரசியல் தலையீடு இருப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் மீது அரசு கட்டுப்பாடுகளை விதிப்பது அதிகார தலையீடாக மாறிவிட்டது.
தேசத்தின் ஒருமைப்பாடு அனுதினமும் சிதைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன. ஆளுங்கட்சியின் சர்வாதிகார போக்கால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பெருத்த பின்னடைவை சந்திக்கின்றன.
பல்கலைக்கழகங்கள், சுய ஆட்சி கல்வி நிறுவனங்கள் மீது நிலையான அரசியல் தலையீடானது நடைபெறுகிறது. பெரும்பான்மையான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் பிரசார கருவியாக மாற்றப்பட்டுவிட்டன.
கடந்த பத்தாண்டுகளாக, ‘மதம் சார் அடிப்படைவாதத்தின்கீழ் வேரூன்றியதொரு வெறுப்பு பிரசாரமானது’, நமது சமுதாயத்தில் பிரிவினை உண்டாக்க காலூன்றியுள்ளது. சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள். மதச்சார்பின்மைவாதிகள் நாஸிச பிரசாரத்தால் களங்கப்படுத்தப்படுகிறார்கள்.
எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்கள் மீதான அடக்குமுறைகளும் வெளியே அறியப்படாத பல வன்முறைகளும் அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
மணிப்பூர் 21 மாதங்களாக பற்றி எரிகிறது, ஆனால் அதற்கான பொறுப்பேற்பதிலிருந்து அதிகாரத்தில் உச்சப்பட்ச பொறுப்பிலிருப்பவர்கள் விலகி வருகின்றனர்.
நம் நாடு பொருளாதார நிலைத்தன்மையற்றதொரு சகாப்தத்தில் உள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும், விதிக்கப்படும் வரிகளால் பெருமளவில் சுரண்டப்படுகின்றன. நமது மக்களின் வாழ்வாதாரம் குறிப்பிடும்படி உயரவில்லை, ஏனெனில் தவறான பொருளாதார கொள்கைகளால் அந்த மகக்ளின் சேமிப்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே, என் சக குடிமக்களே, ‘நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகிய அரசமைப்பின் சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான சரியான நேரம் இதுவே. அரசமைப்பை காப்பதற்காக எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராகுங்கள். இதுவே நமக்கு முன்னோருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார் மல்லிகார்ஜுன் கார்கே