நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
`அரசிடம் எந்தத் திட்டமிடலும் இல்லை’ - நெல் கொள்முதல் விவகாரத்தில் யார் மீது தவறு? |In depth
'கஷ்டப்பட்டு அறுவடை பண்ணி மூட்டை கட்டுன நெல்லுக இப்படி முளைச்சு போயிருச்சே' - கடந்த சில தினங்களாக தமிழ்நாடு நெல் விவசாயிகளின் கதறல் இது.
தமிழ்நாட்டில் 10 நாள்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை, இப்போதும் பரவலாக பெய்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய குறுவை சாகுபடி அறுவடை முடிந்து, கொள்முதலுக்கு சமீபத்தில் தயாராகி இருந்தது. விவசாயிகளும் நெல்களை மூட்டைக் கட்டி கொள்முதலுக்கு தயாராக வைத்திருந்தனர். இந்த நேரத்தில், வடகிழக்கு பருவமழை பெய்ய, அந்த மூட்டைகளில் உள்ள நெல்கள் முளைத்துவிட்டன. இது தமிழ்நாடு நெல் விவசாயிகளைக் கடுமையாக பாதித்துள்ளது.
நெல் கொள்முதல் செய்வது தாமதமானதே, தமிழ்நாடு விவசாயிகளின் இந்த நிலைமைக்கு காரணம் என்று தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி வருகின்றன எதிர்க்கட்சிகள்.

கே.பழனிசாமி பதிவு
"நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.
ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது..." என்று விமர்சித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் கே.பழனிசாமி.
இதே விஷயத்தை சாடி பாமக தலைவர் அன்புமணியும் எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.
தமிழ்நாடு அரசு பதில்
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு 6 பக்க பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அந்த ஆறு பக்கத்தின் முக்கிய சாரம்சம்...
"நெல் கொள்முதல் பணிகளை முந்தைய ஆட்சிக் காலத்தைவிட ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கிறது திராவிட மாடல் அரசு!
நான்காண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் சராசரியாக 42,61,386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் சாதனை!
கடந்த ஆட்சியில் சராசரியாக 22,70,293 மெட்ரிக் டன் மட்டுமே!

தினமும் 2 மணிநேரம் கூடுதலாகவும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் பணிகள்!
அரசின் துரித நடவடிக்கையால் கொள்முதல் செய்யப்படும் நெல் மாவட்டங்களுக்கு இரயில்கள் மூலம் அனுப்பப்படுகின்றன!
தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கியதுடன் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையையும் உயர்த்தி வழங்கியுள்ள திராவிட நாயகர்!
ஈரப்பதத்தை 17 சதவீதம் என்பதை 22 சதவீதமாக உயர்த்திட திராவிட நாயகரின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசின் குழு வருகை!"
நெல் கொள்முதல் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன... தமிழ்நாடு அரசு இல்லை என்று மறுக்கின்றன... இந்த நிலையில், உண்மை என்ன என்பது குறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை விமல்நாதனிடம் பேசினோம். அவர் கூறியதாவது...
"குறுவை சாகுப்படிக்கு வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த ஆண்டும் திறக்கப்பட்டது.
அதன் பிறகு சாகுபடி தொடங்கி, செப்டம்பர் இறுதி வாரத்திலும், அக்டோபர் முதல் வாரத்திலும் அறுவடை செய்யப்பட்டாகி விட்டது.
இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை... காலம் காலமாக இருந்துவரும் நடைமுறை தான்.
ஆனால், அதற்கே இந்த அரசு தயாராக இருந்திருக்கவில்லை.

முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு அதிக நெல் பயிர் செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இந்தத் தகவல்களைத் தெரிவிக்கவே, தமிழ்நாடு அரசிற்கு வேளாண் துறை, உற்பத்தி துறை, வருவாய் துறை ஆகிய துறைகள் உள்ளன.
இருந்தும், நாங்கள் அறுவடை செய்து கொண்டு செல்லும் நெல்லை கொள்முதல் செய்வதற்கான போதுமான வசதி அரசாங்கத்திடம் இல்லை. ஒருவேளை சரியாக கொள்முதல் செய்யப்பட்டிருந்தாலும், அதை சேமித்து வைக்கும் அளவிற்கான கட்டமைப்பு வசதி அரசாங்கத்திடம் இல்லை.
இது தான் தமிழ்நாடு அரசு நெல் கொள்முதலில் கோட்டைவிட்டதற்கு மிகப்பெரிய காரணம்.
இல்லை...!
'அதிக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது' என்று கூறுகிறார்களே... அது ஒன்றும் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. விவசாயிகளை அலைக்கழிக்க வைத்து தான், கொள்முதல் செய்தார்கள். நாங்கள் கொண்டு சென்ற நெல்களை கொட்ட கொள்முதல் நிலையங்களில் போதுமான இடம் இல்லை.
சாலைகளில் கொட்டி வைக்கவேண்டிய நிலைக்கூட இருந்தது. அப்படி கொட்டிய நெல்களைப் போர்த்தி வைக்க, தார்பாய்கள் கூட கொள்முதல் நிலையங்களில் சரியாக இல்லை.
அடுத்ததாக, கொள்முதல் நிலையங்களில் இருந்து அரவை மில்களுக்கு நெல்களை எடுத்து செல்லவும் அரசாங்கத்திடம் சரியான வசதி இல்லை.
ஆக, இந்த அரசாங்கத்திடம் நிறைய இல்லை... இல்லை... இல்லை தான் இருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளில்...
ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் செய்கிறோம் என்று பெரிதாக பேசுகிறார்கள். இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. கடந்த ஆட்சிக்காலங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல் கொள்முதல்கள் செய்யப்பட்டன தான்.
நடமாடும் கொள்முதல் நிலையங்கள்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடமாடும் கொள்முதல் நிலையம் கொண்டுவரப்பட்டது. அது கடந்த ஆட்சிக்காலத்தில், நடந்த பல்வேறு மோசடிகள் மற்றும் குளறுபடிகளால் கைவிடப்பட்டது.
நடமாடும் கொள்முதல் நிலையங்கள் திட்டம் என்பது சிறந்த திட்டம்... விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டம். கடந்த ஆட்சியில் கைவிடப்பட்ட நடமாடும் கொள்முதல் திட்டத்தை இப்போது ஏன் இவர்களது ஆட்சியில் ஊழல்கள் இல்லாமல் கொண்டுவரக்கூடாது.
இன்னொரு மிக முக்கியமான விஷயம்...
ஒவ்வொரு சாகுபடி காலங்களுக்கு முன்பும், தஞ்சாவூரில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும். அப்போது சாகுபடி, அறுவடை ஆகியவற்றை பற்றி தமிழ்நாடு வேளாண் அதிகாரிகளும், விவசாயிகளும் கூட்டத்தில் கலந்தாலோசிப்பார்கள்.
ஆனால், இந்தக் கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை.
மேலும், விவசாயிகள் எவ்வளவு நெல் சாகுபடி செய்ய வேண்டும் என்கிற இலக்கு கூட இந்த ஆண்டு அரசு நிர்ணயிக்கவில்லை.
இப்படி இலக்கு தொடங்கி கொள்முதல் வரை இந்த அரசாங்கத்திடம் எந்தத் திட்டமிடலும் இல்லை. இதனால், தற்போது ஏற்பட்டுள்ள சுமைகள் அனைத்தும் விவசாயிகளின் தலையில் விழுந்துவிட்டன.
இந்த இடத்தில் இன்னொரு கவலை விவசாயிகளுக்கு எட்டிப்பார்க்கிறது.
கடந்த ஆண்டில், மொத்தமாக 49 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு குறுவை காலத்தில் 9 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலே நடந்துள்ளது. அதற்கே இந்த நிலை என்றால், மீதம் உள்ள மெட்ரிக் டன் நெல் கொள்முதல்கள் என்ன ஆகுமோ?
இந்தப் பிரச்னை தவிர்க்க, தமிழ்நாடு அரசாங்கம் விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள ஒரு கூட்டத்தைக் கட்டாயம் நடத்த வேண்டும். இந்தக் கூட்டம் சமீப காலங்களாக நடக்காததால் தான், கொள்முதல்களில் பெரும் பிரச்னை நிலவி வருகிறது.
நெல் முளைத்த பிரச்னை இந்தக் குறுவையில் மட்டும் நடக்கவில்லை. கடந்த கோடை பயிர் கொள்முதலின் போதும் நடந்தது.
அப்போதே அரசாங்கம் சுதாரித்து இருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் அப்படி எதுவும் செய்யவில்லை. அதற்கான விளைவே தற்போதைய நிலை.
தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு, அவர்கள் தான் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?
நெல் கொள்முதலில் மத்திய அரசும் கவனம் செலுத்த வேண்டும். காரணம், தமிழ்நாடு அரசு நெல்லை கொள்முதல் செய்து மத்திய அரசிற்கு தான் தருகிறது.
மத்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கையை விடுக்கின்றன. அந்த எச்சரிக்கைகளுக்கு ஏற்ற மாதிரி, கொள்முதல்களில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
மத்திய அரசு கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 17 சதவிகிதம் தான் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இந்த ஈரப்பதத்திற்கு விவசாயிகள் காரணம் இல்லையே.

இந்தப் பிரச்னையை அரசாங்கம் தான் கையாள வேண்டும். அவர்கள் நவீன ஈரப்பத உலர் இயந்திரங்களை வாங்கி, ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் வாங்கி வைக்க வேண்டும்.
இந்த இயந்திரங்களை நிறுவும் வரை, ஈரப்பத தளர்வுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதற்கான நிரந்தர அரசாணையும் வழங்கப்பட வேண்டும்.
இதை செய்தாலே, ஈரப்பத பிரச்னையை சரி செய்துவிடலாம். அதன் பிறகு, ஈரப்பதத்தை ஆய்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆக மொத்தம், மாநில அரசு, மத்திய அரசு என இரு அரசுகளும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் வழக்காமன கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்... இந்த நடைமுறைகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்". என்றார்.





















