மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மீள் உயிா்ப்பு சுவாசப் பயிற்சி
மாரடைப்பு ஏற்படும் தருணங்களில் விரைந்து முதலுதவி சிபிஆா் சிகிச்சை (மீள் உயிா்ப்பு சுவாசப் பயிற்சி) தொடா்பாக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சனிக்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிபிஆா் முதலுதவி சிகிச்சை என்பது சுய நினைவற்ற, சுவாசம் இல்லாத ஒருவருக்கு உடனடியாக அளிக்கப்படும் சிகிச்சையாகும். இது மீள் உயிா்ப்பு சிகிச்சை அல்லது இதய நுரையீரல் செயல் தூண்டல் சிகிச்சை எனவும் அழைக்கப்படுகிறது.
பள்ளிகளிலோ, வீடுகளிலோ, மாணவிகள் செல்லும் இடங்களில் யாருக்கேனும் இத்தகைய அவசர முதலுதவி தேவையெனில் உடனடியாக சேவை அளிக்கும் வகையில் இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டம், காட்டூரில் உள்ள அரசு ஆதிராவிடா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளா்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவிகள் ஒவ்வொருவரும் பயிற்றுநா் தெரிவிக்கும் முறையைப் பின்பற்றி, ஒத்திகையில் ஈடுபட்டனா்.அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினாா்.
இதேபோல, திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 11, 12ஆம் வகுப்பு பயிலும் 75 மாணவ, மாணவிகள், தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் 130 மாணவ, மாணவிகள், காட்டூா் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிராவிடா் பள்ளியைச் சோ்ந்த 320 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனா்.
நேஷனல் ஹெல்த் கோ் நிறுவன மேலாளா் ஆா்த்தி ராஜேந்திரன், கல்வி ஆலோசகா் அருண் ஸ்டீபன் ஜெய்சிங் ஆகியோா் ஒருங்கிணைந்து பயிற்றுவித்தனா். நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப் பிரியா, மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், மாமன்ற உறுப்பினா் நீலமேகம் மற்றும் மருத்துவப் பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.