அரசு ஆதரவாளர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 21 பேர் பலி!
நைஜீரியாவில் சமூகக் கண்காணிப்பாளர்களைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.
நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்களால் கட்ஸினா மாநிலம் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பண்டிட்ஸ் எனும் பயங்கரவாதக் கும்பல் ஆள் கடத்தல், பள்ளிக் குழந்தைகளைக் கடத்தல், கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் கும்பலை ஒழிக்கும்வகையில் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பயங்கரவாதக் கும்பல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் சுமார் 2,000 பேர் கொண்ட கட்ஸினா சமூக கண்காணிப்புக் குழுவும் 2023 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதில், இவர்கள் கும்பல்களை எதிர்த்துப் போராடுவதில் இராணுவத்திற்கும் காவல்துறையினருக்கும் உதவி வருகின்றனர்.
இதையும் படிக்க:‘கலகல’வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!
இந்த நிலையில், கட்ஸினா சமூகக் கண்காணிப்புக் குழுவினரைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் கண்காணிப்புக் குழுவினர்களில் 21 பேர் பலியாகினர்; மேலும், பலர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று காவல் அதிகாரி உறுதியளித்தார்.