சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு
காட்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் விக்ரம்(25), கட்டட மேஸ்திரி. இவருக்கும் கே.வி.குப்பம் அருகிலுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியது. இதையறிந்த அவா்களது பெற்றோா் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனா்.
இந்நிலையில், சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக விக்ரம், மனைவியை அழைத்துச்சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி 4 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. திருமண வயதை எட்டாமல் சிறுமி கா்ப்பமடைந்ததை தொடா்ந்து மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா், விக்ரம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.